தொடர் வெற்றி! இனி?

தொடர் வெற்றி!  இனி?
Published on

தெளிவானத் தீர்ப்பை அளித்திருக்கிறது தேர்தல். குதிரையை ஜெயலலிதாவிடமும், கடிவாளத்தை ஸ்டாலின் கரங்களிலும் தந்திருக்கிறது. திசையை ஒருவரும், வேகத்தை மற்றொருவரும் தீர்மானிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது அடுத்த ஐந்தாண்டுப் பயணம்.

இருவருக்குமே இது ஒரு சவால். அதே நேரம் இருவருக்குமே இது ஒரு வாய்ப்பு. ஒருவர் வீழ்ச்சியில்தான் இன்னொருவருக்கு வாழ்வு எனக் கட்டமைக்கப்பட்டிருக்கிற தமிழக அரசியலில் இரு கட்சிகளும் இணக்கமாகச் செயல்பட இயலுமா என்பது எதிர் நிற்கும் சவால்.

ஈகோவைச் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, இரண்டு கட்சிகளும் இணக்கமாகச் செயல்பட்டால், திராவிடக் கட்சிகளே தொடர்ந்து பல காலம் பதவியில் நீடிக்கும் சாத்தியங்கள் உண்டு என்பது ஒருபுறம் இருக்க, இரு தலைமைகளுமே தங்கள் ஆளுமைகள் குறித்த வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற முடியும் என்பது ஒரு வாய்ப்பு.

ஆணவம் நிறைந்தவர், யாருடனும் ஒத்துப் போக மாட்டார் என்று ஆண்கள் நடுவேயும் ஆண்தன்மை கொண்ட ஊடகங்களிடையேயும் ஏற்பட்டுள்ள எண்ணத்தை ஜெயலலிதா, எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையையும் வாய்ப்பையும் அளிப்பதன் மூலம் மாற்ற முடியும். அவர் பதவி ஏற்பு நிகழ்ச்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து வெளியிட்டஅறிக்கைக்குக்  கிடைத்த வரவேற்பு ஓர் உதாரணம்.

தனிப்பட்ட பகைமையை, அரசியல் பகைமையாக வளர்த்தெடுத்த பழைய தலைமுறையின் அணுகுமுறையிலிருந்து என் பாதை வேறானது, கருத்து மாறுபடுகிறேன், ஆனால் காழ்ப்பு ஏதும் இல்லை என்பதை மெய்ப்பிப்பதன் மூலம் புதிய தலைமுறை வாக்காளார்களிடம் நன்மதிப்புப் பெற ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு இது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கடைசிவரை  அவர் அமர்ந்திருந்தது, அதன் பின் தனது டிவிட்டர் வழியே புதிய அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்தது ஆகியவற்றிற்குக் கிடைத்த பாராட்டுக்கள் ஒரு சான்று.   

 தேர்தல் வரலாறுகளைக் கூர்ந்து வாசிக்கி றவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்கள்.  தமிழக வாக்காளர்கள் வாக்குறுதிகளின் அடிப்படையில் அல்ல, தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அல்ல, கட்சிகளின் அடிப்படையில் அல்ல, வேட்பாளர்களின் செல்வாக்கின் அடிப்படையில் அல்ல, தலைவர்களின் ஆளுமையின் மீது நம்பிக்கை வைத்து அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். காமராஜ் மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்குப் போன போது, மற்றெந்தக் காங்கிரஸ் தலைவர்களை விடவும், அண்ணாவை அவர்கள் விரும்பினார்கள். அண்ணாவின் மறைவிற்குப் பின் கருணாநிதிக்கு ஆதரவளித்தார்கள். அவர் எம்.ஜி.ஆரோடு முரண்பட்டபோது எம்.ஜி.ஆர் பக்கம் நின்றார்கள். எம்.ஜி.ஆர் மறைந்த பின் நடந்த 1989 தேர்தலில் தமிழக தேர்தல்களம் என்பது ஆளுமைகளின் போட்டி என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. நான்கு தலைவர்கள் நான்கு அணிகளாகக் களமிறங்கினார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ஜானகி என்ற நால்வரில் அன்று பேராளுமை (ண்tச்tதணூஞு) கொண்டவராக கருணாநிதி விளங்கினார்.13ஆண்டு வனவாசம் முடிந்து அரியணைக்குத் திரும்பினார்.

தமிழக அரசியலில் ஆளுமை குறித்த தோற்றத்தை ஏற்படுத்துவதும், வலுப்படுத்துவதும் முக்கியம். அதற்கான வாய்ப்பு இப்போது ஸ்டாலினுக்கு வாய்த்திருக்கிறது.

ஆளுமை பற்றிய ரகசியத்தை யாரையும் விட நன்கு புரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.  அவரும் கருணாநிதியும் எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும், ஊடகங்களும் வரலாற்றாசிரியர்களும் கட்டமைப்பது போல, எலியும் பூனையுமாக இருக்கவில்லை. ஒரே மாம்பழத்தில் நறுக்கி எடுக்கப்பட்ட இரு கதுப்புகளாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

சட்டமன்ற வளாகத்தில் அவைக்கு வெளியே லாபியில் ஓர் அறை இருந்தது. வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட அந்த அறையில், அவை நடவடிக் கைகள் அயற்சி ஊட்டுகிற போது, கருணாநிதியும், எம்ஜிஆரும் சென்று ஓய்வெடுப்பதுண்டு. அவர்கள் அப்படி சந்தித்துப் பேசுவதைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்த நெல்லிக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி என்ற திமுக தலைவர், என்ன பேசுகிறார்கள் இருவரும்? இரு கழகங்களும் இணையப் போகிறதா என்று பகிரங்கமாகவே கேள்வி எழுப்பினார். ‘அவையை நடத்திச்  செல்வது பற்றி ஆலோசிக்கிறோமே தவிர, கட்சிகளை இணைக்கப் பஞ்சாங்கம் பார்க்கவில்லை’ எனக் கருணாநிதி பதிலளித்ததும் உண்டு.

எம்.ஜி.ஆர், கருணாநிதியைப் போல ஒரே ஊற்றில் உருவாகி இரண்டு நதிகளாகப் பிரிந்து நடந்தவர்கள் இல்லை  ஜெயலலிதாவும் ஸ்டாலினும். இருவரிடையேயும் நினைத்துப் பார்த்து நெகிழவும், பொருமவும் நெருக்கமான தனிப்பட்ட அனுபவங்கள் இல்லை. இவர்கள் எதிரெதிர் வீட்டில் வசிக்கிற வாரிசுகள்;  இருவருக்குமிடையேயான உறவு காரியார்த்தமான -‘பிசினஸ் லைக்’ உறவு.

இதை மற்ற எவரையும் விட ஸ்டாலின் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். சுனாமியின் போது திமுகவின் சார்பில் திரட்டப்பட்ட நிதியை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து நேரில் அளித்தார். ஆனால் அந்த தருணங்கள் பின்னர் அரிதாகிவிட்டன. அண்மை வெள்ளத்திற்கான உதவி அதிகாரிகளிடம்தான் அளிக்கப்பட்டது. இரு தரப்புமே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் காரியார்த்தமான உறவை மீளக் கட்டுவது  இருவருக்குமே கடினமானதல்ல.

என்ன காரணமென்று தெரியவில்லை, அக்டோபரில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலா, அதற்கும் முன்னரே வந்துவிடக் கூடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பா, அல்லது நூலிழையில் கிடைத்த ஆட்சி என்பதால் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விழைவா, என்ன காரணமென்று  ஊகிக்க முடியவில்லை, ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் காட்டி வருகிறார். 22 நிமிடத்தில் பதவி ஏற்புச் சடங்குகளை நிறைவேற்றிவிட்டு, நேரடியாகக் கோட்டைக்கு வந்துவிட்டார். கடந்தகாலத்தில் ஒரு நாள் கழித்து வந்த வரலாறுகள் உண்டு.

அரசியல் சவால்களை விடவும் நிர்வாகத்தில் நெடியசவால்கள் அவர் முன் நிற்கின்றன என்பது கூட செயல் வேகத்திற்கான காரணமாக இருக்கலாம். குறுவைக்குக் காவிரியைப் பெற்றுத் தருவதில் தொடங்கி இலவசங் களால் ஏற்படக் கூடிய நிதி நெருக்கடியைச் சமாளிப்பது வரை சிறிதும் பெரிதுமாகச் சவால்கள் அவர் முன் அணிவகுத்து நிற்கின்றன.

புத்திசாலித்தனத்தாலும் மன உறுதியாலும் அவர் அவற்றை வெற்றி கண்டுவிடுவார் என்றே நம்பலாம். திறமையான சேல்ஸ்மேனுக்கே கடுமையான இலக்குகள் தருவது கம்பெனிகளின் பழக்கம். முயற்சியுடைய தலைவர்கள் முன்னால் கடுமையான சவால்களை வைப்பது காலத்தின் வழக்கம். 

ஆனால் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்ள வேண்டியவர் விஜயகாந்த். தேர்தலுக்கு முன்பே அவரது முடிவுகள் குறித்துக் கட்சிக்குள் கலகம் எழுந்தது.போட்டியிட்ட 104 தொகுதிகளில் 103 தொகுதிகளில் (விஜயகாந்த் உட்பட)  டெபாசிட் இழந்து நிற்பது அந்தக் கலகக்காரர்களின் கணக்கு, ‘அண்ணியாரி’ன் ஆசைகளைவிட அபத்தமானது அல்ல என்பதை நிரூபிக்கிறது. மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறி வரும் உள்ளாட்சித் தேர்தலைத் தனியே சந்திக்கலாம் என்ற குரல்கள் அவரது கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பணபலத்தால் பெரிய திராவிடக் கட்சிகள் வென்றுவிட்டார்கள் என்ற வாதத்தை மெய்ப்பிக்க மட்டுமல்ல, கட்சி கரைந்து போய்விடாமல் காப்பாற்றவும் அவர் உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காரர்களின் விருப்பத்திற்கு செவி சாய்த்துத்தானாக வேண்டும்.எனவே மக்கள் நலக் கூட்டணி என்ற மாற்று அணிக்கு விரைவிலேயே திரை விழும்.

திராவிடக் கட்சிகளிடையே நேசம் பெருக, எதிர் அணிகள் கலகலக்க இன்னொரு நாடகம் அரங்கேறும்.

ஜூன், 2016

logo
Andhimazhai
www.andhimazhai.com